பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் தொடரும் வாகன நெரிசலால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி உட்பட மாதாந்திர பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வாகனங்களால் கோவில் வாசலில் போக்குவரத்து பாதித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன், கோவில் எதிரே வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
இருப்பினும் கோவில் வாசலில் நிறுத்துவது தொடர்கிறது. வேப்பூர் மார்க்கத்திலிருந்து வடகோட்டை வீதி வழியாக விருத்தாசலம் வரும் வாகனங்கள், கோவில் வளாகத்தை கடந்து செல்ல நீண்ட நேரமாகிறது. இதனால், பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மாசி மக திருவிழாவிற்கு வந்த எஸ்.பி., ராதிகா, பாதுகாப்பு கருதி கோவில் முன் மண்டபத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, வாகன நெரிசல், குற்ற சம்பவங்களை தவிர்க்குமாறு உத்தரவிட்டார். இருப்பினும் வாகன நெரிசல் வாடிக்கையாகிவிட்டது. எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகன நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.