பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
11:06
திருச்சி: வயலூர் முருகன் கோவிலில், நேற்று, அரோகரா கோஷம் முழங்க, வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. திருச்சி, வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், வைகாசி விசாக திருவிழா கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, தினமும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய ஸ்வாமி, நந்தி வாகனம், அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். கடந்த, 30ம் தேதி மாலை, 5 மணிக்கு சிங்காரவேலவர் அதவத்தூர் தைப்பூச மண்டபம் சென்றார். இரவு, 9 மணிக்கு குதிரை வாகனத்தில் அதவத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். வைகாசி விசாக தேரோட்டம், நேற்று நடந்தது. மதியம், 3.30 மணிக்கு திருத்தேரில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேரில் எழுந்தளுளினார். சுற்றுப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று, (1ம் தேதி) காலை நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, பால் காவடி, அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார ஸ்வாமி வெள்ளிக் கவச அலங்காரத்துடன் வெள்ளி வாகனத்தில் அருள்பாலிக்கிறார். பின் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, (2ம் தேதி) மாலை, 4.30 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு, 8 மணிக்கு தெப்ப உற்வசமும் நடக்கிறது. 3ம் தேதி இரவு, 9 மணிக்கு ஆளும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. இதே போல், உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில், நேற்று வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.