பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
10:06
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றி, திருவிழா நடந்து வருகிறது. சிறப்பு அபிஷேகம் வைகாசி விசாகமான நேற்று, வடபழனி கோவிலில், காலையில், பல்லக்கு திருவிழா நடந்தது. அதையடுத்து, வேங்கீஸ்வரர் கோவிலில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் சுமந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். பக்தர்களில் பலர், ஏராளமானோர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் சென்றனர். பின்னர், வடபழனி முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீர்த்தவாரி, மாலையில் திருக்கல்யாணம், இரவு, வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தன. ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே உள்ள ஆழிகண்டீஸ்வரர் கோவிலில், நேற்று, காலை 7:30 மணியில் இருந்து காலை 9:00 மணி வரை, பாலசுப்ரமணியருக்கு, சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. சேலையூர், அவ்வை நகரில், வள்ளி, தேவசேனா சமேத, சிவசுப்பிரமண்ய சுவாமி கோவிலில், வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, 108 பால்குடம் மற்றும் காவடி திருவீதி உலாவுடன், கோவிலில் சிறப்பாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலாவுடன், விழா நிறைவடைந்தது.
அன்னதானம்: குன்றத்துாரில் உள்ள மலைக்கோவில் எனப்படும், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பிற்பகலில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.