பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகன் அவதரித்த நாளான நேற்று வைகாசி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தாமரை மலர்களில் தவழ்ந்த புனித நீரைக்கொண்டு, முருகனுக்கு பல்வேறு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. பின் சிறப்பு அலங்காரத்தில் முருகன் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிணத்துக்கடவு கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்றுமுன்தினம் வைகாசி விசாகத்தை ஒட்டி சஷ்டி குழுவினர் பால் குடம் எடுத்து வந்து வேலாயுதசாமியை வழிப்பட்டனர். இந்த ஆண்டு, நேற்றுமுன்தினம், வைகாசி விசாக நட்சத்திரம் மாலை, 6:00 மணிக்கு மேல் துவங்கியது. இதனை ஒட்டி, சஷ்டி குழுவை சேர்ந்த 60 பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, மலை அடிவாரம் பாத விநாயகர் கோவிலுக்கு வந்தனர். பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் ஆர்.எஸ்.ரோடு, திரு.வி.க., விவேகானந்தர் வீதி, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு, சிவலோகநாதர் கோவிலுக்கு சென்று சிவலோகநாதரை வழிபட்டனர். பொன்மலையை சுற்றி கிரிவலம் வந்து, பின் மலை மேல் சென்றனர். அங்கு, வேலாயுதசாமிக்கு ஊற்றி பால் அபிேஷகம்செய்தனர். பின், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்தனர். பின், வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.