அய்யலூர் கோயில் எறிகாசு ரூ.4.80 லட்சத்திற்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2015 12:06
வடமதுரை:அய்யலூர் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு ஏலம் ரூ.4.80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்- திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலூர்- தங்கம்மாபட்டி இடையே வண்டி கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களில் பயணிப்போர், சுவாமிக்கு காணிக்கையாக காசுகளை எறிந்து செல்வர். இவ்வாறு எறியப்படும் காசுகளை சேகரிக்கும் உரிமையை, இந்துசமய அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடுகின்றனர்.
இத்துடன் கோயிலுக்காக உடைக்கப்படும் சிதறு தேங்காய்களை சேகரிக்கவும், வாகனங்கள் நிறுத்தத்திற்கும் தனித்தனி ஏலம் விடப்படுகிறது. நேற்று இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஏலம் நடந்தது. செயல்அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை தர்ம கர்த்தா ரெங்கநாதன் முன்னிலை வகித்தனர். இதில் எறிகாசு சேகரிக்கும் உரிமத்தை கொல்லப்பட்டி ராமச்சந்திரன் ரூ.4.80 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.
சிதறு தேங்காய் உரிமத்தொகை அதிகமாக உள்ளது எனவும், கோயில் பாதையில் உள்ள ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு பணி நடப்பதால் வாகனங்கள் அதிகமாக வருவதில்லை எனக்கூறி வாகன நிறுத்த உரிமத்தையும் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் இவ்விரு ஏலங்களும் ஒத்தி வைக்கப்பட்டன.