பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
01:06
திண்டிவனம் : திண்டிவனம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் முடிந்து, குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. பூஜைகளை சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையில், கடுக்கூர் ஆதிகேசவபெருமாள் கோவில் பட்டாச்சாரியர் ஸ்ரீராமன் மற்றும் திண்டிவனம் ரகு, ஸ்ரீதர் ஆகியோர் செய்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் வீதியுலா நடந்தது.
தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் சண்முகம், வடம் பிடித்து துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் வெங்கடேசன், அ.தி.மு.க., நிர்வாகி ராதாகிருஷ்ணன், ராம்டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டது.