பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
01:06
வையாவூர்: மதுராந்தகம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் உள்ள தர்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நேற்று, நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் உள்ளது, திரிபுரசுந்தரி சமேத தர்மேஸ்வரர் கோவில். இந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, வையாவூர் கிராமவாசிகள் முடிவு செய்தனர். அதன்படி, சில மாதங்களாக, இந்த கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், திருப்பணிகள் முடிந்து, ஜூன் மாதம் 7ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த, கிராமவாசிகளால் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் 22ம் தேதி, பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 5ம் தேதி, பல்வேறு சிறப்பு பூஜைகளும், 6ம் தேதி சிறப்பு யாகங்களும் நடைபெற்றன.
நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், கோவிலின் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண, வையாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான கிராமவாசிகள், கோவில் வளாகத்தில் குவிந்தனர்.