பதிவு செய்த நாள்
11
ஜூன்
2015
11:06
துறையூர்: சிரவண உற்சவ விழாவையொட்டி, துறையூர் பெருமாள் கோவிலில் ஸ்வாமி திருக்கல்யாணம் நடந்தது. துறையூர் பெருமாள்மலை மேல் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமிக்கு, ஆண்டுதோறும் சிரவண உற்சவம் நடைபெறும். இதையொட்டி, கடந்த, 7ம் தேதி, மலைமேல் இருந்து ஸ்வாமி, அடிவாரத்திலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளினார். மதியம், துறையூர் கீழக்கடை வீதியிலுள்ள மண்டபத்தில் ஸ்வாமி எழுந்தருளினார். அங்கிருந்து, வெல்வெட் அலங்காரத்தில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. துறையூரிலுள்ள பெருமாள் கோவிலில் இருந்து, இரவு வேணுகோபால ஸ்வாமி பாலக்கரை சந்திப்பு சாலை வரை சென்று, பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமியை எதிர்கொண்டு அழைத்து வந்தார். நேற்று முன்தினம், ஆர்ய வைஸ்ய சமூகத்தினர், திருமண சீர்வரிசை பொருட்கள் எடுத்து சென்றனர். கோவிலில் பெருமாள்மலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமிக்கும், பாமா ருக்மணி சமேத வேணுகோபால ஸ்வாமிக்கும் திருமஞ்சனம், ஸ்வாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்த, ஸ்வாமி பெருமாள் மலைக்கு எழுந்தருளினார்.