ஜூன் 15ல் சபரிமலை நடை திறப்பு:எஸ்.பி.பி.,க்கு ஹரிவராசனம் விருது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2015 11:06
சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூன்15 மாலை 5:30 மணிக்கு திறக்கிறது. ஜூன் 20ல் நடக்கும் நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.அனைத்து தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15 மாலை 5:30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். மற்ற பூஜைகள் நடக்காது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஜூன் 16- அதிகாலை ௫ மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவக்கி வைப்பார். ஜூன் 20 வரை அதிகாலை 5:15 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நெய்அபிஷேகம் நடக்கும். இந்த ஐந்து நாட்களிலும் மற்ற பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்மன பூஜை நடக்கும். ஜூன் 20- காலை ௮ மணிக்கு சன்னிதானத்தில் நடக்கும் விழாவில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படும். தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் விருது வழங்குவார்; ஒரு லட்சம் ரூபாய், பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கப்படும்.ஜூன் 20 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 மாலை நடை திறக்கும்.