சிவகங்கை : சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நகரின் காக்கும் தெய்வமான காளிக்கு, ஆண்டுதோறும் ஆனி வெள்ளியன்று பூச்சொரிதல் விழா நடத்தப்படும். இதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 9.15 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் துவங்கின. காலை 10 மணிக்கு, வாணவேடிக்கை முழங்க, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வரும் 13ம் தேதி லட்சார்ச்னை, ஜூலை 15 அன்று காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் நடக்கும். செயல் அலுவலர் ஜெகநாதன், பூஜாரி பூமிநாதன் ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர்.