பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
11:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, நடராஜர் தில்லையம்பலத்தில் ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு மகா தரிசனம் அளித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம், கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, நடராஜர் சமேத சிவகாமசுந்தரி அம்மன் தேரிலிருந்து, ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பொது தீட்சிதர்கள் சார்பில் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று அதிகாலை 3.00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி திருஆபரண ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். சித்தசபையில் காலை பூஜை நடைபெற்று, 11.00 மணிக்கு ரகசிய 12.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. ஆயிரங்கால் மண்டபம் முன்பு 2.30 மணிக்கு எழுந்தருளிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. மாலை 3.15 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜசபையிலிருந்து ஆனந்த நடனம் ஆடியபடி, தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு சித்சபைக்கு பிரவேசம் செய்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தில்லைக் கூத்தானே, பொன்னம் பலத்தானே, ஆடல் வல்லானே என கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். ஏ.டி.எஸ்.பி., திருமலைச்சாமி தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சர்வேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.