மதுரை: மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ராஜ கோபுரம் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஜன., 28 ல் கோயில் வளாகத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக சிருங்கேரி சாரதாபீடம் அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளும், மே 26ல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக பாரதி தீர்த்த மகா சுவாமிகளும் வருகை தந்திருந்தனர். நேற்று காலை உஷ பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 9 முதல் காலை 10 மணிக்குள் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மதுரை ஐயப்ப சேவா சங்கம் செய்திருந்தது. அபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகள், பாரதி தீர்த்த மகா சுவாமிகள், மாதவன் நம்பூதிரிபாட் ஆகியோர் உருவ படங்களை ராம்கோ நிறுவனங்களின் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிர்வாக இயக்குனர் ஷோபனா ராமச்சந்திரன், சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவிற்கு தினமலர் பொது மேலாளர் என்.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.