உலக அன்னையான அம்பாள் காஞ்சிபுரத்தில் காமாட்சியாகவும், திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரியாகவும் இருந்து உயிர்களின் நன்மைக்காக சிவனை பூஜிக்கிறாள். அம்பிகை சிவனை பூஜிப்பது அவளது சொந்த நலனுக்காக அல்ல... தன் பிள்ளைகளான உலக உயிர்களுக்கே என்கிறது ஆகமம். சுவாமி! தாங்கள் உபதேசித்த சிவாகம அடிப்படையில் உங்களைப் பூஜிக்க, எனக்குள் ஆவல் பொங்குகிறது, என்று அம்பிகையே சிவனிடம் தன் விருப்பத்தை சொன்னதாக பெரியபுராணம் கூறுகிறது. தினமும் உச்சிக்கால பூஜையில் அகிலாண்டேஸ்வரி சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக, இங்கு அர்ச்சகர் சேலை உடுத்திக் கொண்டு சுவாமி சந்நிதிக்கு பூஜைக்கு செல்வார்.