பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
11:07
பழநி : பழநி அருகே, 15ம் நூற்றாண்டின் பாசன முறையான, "குறடு கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநி-கொடைக்கானல் ரோட்டில், அய்யம்புள்ளி கண்மாயின் மதகு பகுதியில் இந்த அமைப்பு உள்ளது. 16 அடி உயரமுள்ள நான்கு தூண்களின் மீது, நான்கு தனித்தனி கல் பலகைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. அடிப்பகுதியில் மயில், யாளி, மகரம்(முதலை), மீன் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் நான்கு புறமும், மூன்று கிடைமட்ட கோடுகள் வரையப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியது: கி.பி.1471ல் பழநி பகுதியில், மல்லிகார்ஜுன ராயர் என்ற விஜயநகர அரசர் ஆட்சி செய்தார். இவரது காலத்திற்கும், நாயக்கர் தோற்றத்திற்கும் இடைப்பட்ட(கி.பி., 14-15ம் நூற்றாண்டு) காலத்தில் இது கட்டப்பட்டது. கண்மாயில் நீர் நிரம்பி, மேற்பகுதி கோடுகள் மூழ்கியுள்ள போது, உபரிநீர் வெளியேறும். நீர் குறையும் போது, பாசனத்திற்கு ஏற்ப, வெளியேறும் தண்ணீரின் அளவு குறையும். அக்கால பாசன முறைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு கல் பலகையில், உடைந்த கல்வெட்டின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. இதில், கி.பி.12ம் நூற்றாண்டில் வையாவி நாட்டு(பழநி பகுதி) இறைவனுக்கு சந்தி விளக்கு எரிப்பதற்காக ஒரு மா நிலம், தானம் அளித்த தகவல் உள்ளது. மதகின் எதிர் கரைப்பகுதியில், நாயக்கர் கால கட்டட அமைப்புடன் (16 செ.மீ., நீளம்; 8 செ.மீ., அகலம்; 4 செ.மீ., தடிமன் கொண்ட செங்கல்களுடன்) சேதமடைந்த கோவில் உள்ளது. இது, இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்த சிவன் கோவிலாக இருக்கலாம். தற்போது சப்த கன்னிகள், கருப்பண்ணசாமி சிலைகளுடன் வழிபாடு நடக்கிறது. இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.