சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 3ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய நாளான இன்று, காலை முதல் பெண்கள் நகரில் பல்வேறு இடங்களில் இருந்து பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு செல்வர். அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவர். இன்று காலை முதல் இரவு வரை பூச்சொரிதல் நடக்கும். நிகழ்ச்சியை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருவர். இன்று காலை முதலே சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து பிள்ளைவயல் ஆர்ச் முதல் கோயில் வரை ரோடு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பும் நடக்கும். "பேரிகாட் அவசியம்: இது போன்று சுவாமி கும்பிட செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பிள்ளைவயல் ஆர்ச் முதல் கோயில் வரை ரோட்டின் நடுவே "பேரிகாட் அமைத்து கோயிலுக்கு செல்பவர்களை இடது புறமாகவும், திரும்புவர்களை வலது புறமாக அனுப்பலாம். பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதத்தில் கலெக்டர் எஸ்.மலர்விழி, எஸ்.பி., எம்.துரை உரிய ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.