பதிவு செய்த நாள்
13
ஜூலை
2011
11:07
விழுப்புரம் : திருக்காரவாசல் தியாகராஜசுவாமி கோவிலில், 19 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன, 5 கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம்,கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல், தியாகராஜசாமி கோவிலின் பழமை வாய்ந்த மரகதலிங்கம், 1992ம் ஆண்டு திருடு போனது; இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய். கடந்த 2009, டிசம்பர் மாதம், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சிலர், மரகதலிங்கத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிலை திருட்டு கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம், சென்னையிலுள்ள தமிழ்நாடு தடய அறிவியல் கூடத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிந்த நிலையில், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., கன்னியப்பன் தலைமையில் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மரகதலிங்க சிலையை நேற்று ஒப்படைத்தனர். இச்சிலையை, மாஜிஸ்திரேட் மனோஜ்குமார் முன்னிலையில், திருக்காரவாசல் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.