பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
04:07
1. சக்ரேண ஸம்யதி ஹதோபி பலி: மஹாத்மா
சுக்ரேண ஜீவிததனு: க்ரது வர்த்திதோஷ்மா
விக்ராந்திமான் பயநிலீந ஸுராம் த்ரிலோகீம்
சக்ரே வசே ஸ தவ சக்ரமுகாந் அபீத:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரந்த மனம் உடைய பலி என்ற அசுரன் இந்திரனால் கொல்லப்பட்ட போதும் (தசகம் 29 - ஸ்லோகம் 7) சுக்ராச்சாரியாரால் உயிர் பிழைத்தான். பின்னர் சுக்ராச்சாரியரால் செய்யப்பட்ட விஸ்வஜித் என்ற யாகம் மூலமாக மிகுந்த சக்தியையும் வலிமையையும் பெற்றான். அதனால் உன்னுடைய சக்கர ஆயுதத்திற்குக் கூடப் பயப்படாமல் அனைத்து உலகங்களையும் தன் வசமாக்கினான். தேவர்களை ஓடி ஒளிய வைத்தான்.
2. புத்ராத்தி தர்சன வசாத் அதிதி: விஷண்ணா
தம் காச்யபம் நிஜபதிம் சரணம் ப்ரபந்நா
த்வத் பூஜநம் ததுதிதம் ஹி பயோ வ்ரதாக்யம்
ஸா த்வாதசாஹம் அசரத் த்வயி பக்தி பூர்ணா
பொருள்: தனது புத்திரர்களான தேவர்கள் நிலையைக் கண்ட அவர்கள் தாயான அதிதி வருத்தம் கொண்டாள். (காச்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள்; அவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தேவர்கள்.) தனது கணவரான காச்யப முனிவரின் பாதங்களில் விழுந்து சரணம் அடைந்தாள். அவரும் பயோவ்ரதம் என்னும் பெயர் கொண்ட உன்னுடைய பூஜையை அவருக்கு உபதேசித்தார். அவளும் அந்தப் பூஜையை மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டு நாட்கள் செய்தார்.
3. தஸ்ய அவதௌ த்வயி நிலீனமதே: அமுஷ்யா
ச்யாம: சதுர்புஜ வபு; ஸ்வயம் ஆவிராஸீ!
நம்ராம் ச தாம் இஹ பவத்தனய; பவேயம்
கோப்யம் மதீக்ஷணம் இதி ப்ரலபன் அயாஸீ:
பொருள்; குருவாயூரப்பனே! அத்தகைய விரதத்தின் இறுதியில் அதிதி உன் மீது தனது மனதை முழுவதுமாக செலுத்தியிருந்தாள். அப்போது நீ அவளுக்கு முன்பாக கறுத்த உனது திருமேனியுடன், நான்கு திருச்சக்கரங்களுடன் கூடிய உருவமாகத் தேன்றினாய். அவள் உன்னைக் கண்டதும் துதித்து நின்றாள். நீ அவளிடம், நான் உனக்கு மகனாகப் பிறக்கப் போகிறேன். இவ்விதமாக என்னை நீ இங்கு பார்த்த காட்சியை ரகசியமாக வைத்துக் கொள் என்று கூறி மறைந்தாய்.
4. த்வம் காச்யபே தபஸி ஸந்நிததத் ததானீம்
ப்ராப்த: அஸி கர்ப்பம் அதிதே: ப்ரணுத: விதாத்ரா
ப்ராஸுத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம்
ஸா த்வாதசீ ச்ரவண புண்யதினே பவந்தம்
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் காச்யப முனிவரின் தவ வலிமையால் உண்டான வீர்யத்தில் நீ புகுந்தாய். அதன் மூலம் அதிதியின் கர்ப்பகத்தில் புகுந்தாய். அப்போது ப்ரும்மதேவன் உன்னைத் துதித்தான். அதிதியானவள் - ஒளி வீசும்படியான சங்கு சக்ரம் கொண்ட திருமேனி உடைய உன்னை, துவாதசி திதியன்று, ச்ரவண நட்சத்திரத் தினத்தில் பெற்றாள்.
5. புண்யாச்ரமம் தம் அபிவர்ஷதி புஷ்பவர்ஷை
ஹர்ஷாகுலே ஸுரகுலே க்ருததூர்ய கோஷே
பத்வா அஞ்சலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்யாம்
த்வம் தத் க்ஷணே படுதமம் வடுரூபம் ஆதா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ பிறந்தால்) மிகுந்த புண்ணியம் அடைந்த காச்யபரின் ஆச்ரமத்தை அனைத்து திசைகளில் இருந்தும் மலர்கள் தூவி ஸ்தோத்ரம் செய்தனர். (யார்?) உனது பிறப்பால் மிகுந்த மகிழ்வுற்ற தேவர்கள் இப்படிச் செய்தனர். உனது தாய் தந்தை உன்னை வாழ்த்தினர். அந்த நொடியிலேயே நீ ப்ரஹ்மச்சாரியாக உனது உருவத்தை மாற்றிக் கொண்டாய்.
6. தாவத் ப்ரஜாபதிமுகை: உபனிய மௌஞ்ஜீ
தண்ட அஜின அக்ஷ வலயாதிபி: அர்ச்யமாந:
தேதீப்யமாந வபு: ஈச க்ருத அக்னிகார்ய:
த்வம் ப்ராஸ்திதா: பலிக்ருஹம் ப்ரக்ருத அச்வமேதம்
பொருள்: குருவாயூரப்பா! அப்போது உனது தந்தையான காச்யப ப்ரஜாதிபதி உனக்கு உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்து வைத்தார். நீ மவுஞ்சி என்னும் இடுப்பில் உள்ள கயிறு, பலாசதண்டம், க்ருஷ்ணாஜினம் என்னும் மான்தோல், ருத்ராக்ஷ மாலை ஆகியவற்றை அப்போது அணிந்தாய். (பாகவத்தில் கூறப்பட்டது - கச்யபர் இடுப்பில் உள்ள கயிறையும், ப்ரஹஸ்பதி பூணூலையும், பூதேவி மான் தோலையும், சந்திரன் பலாச தண்டமும், தாய் அதிதி கவுபீனத்தையும், ப்ரும்மா கமண்டலத்தையும், ஸரஸ்வதி ருத்ராக்ஷ மாலையையும், குபேரன் பிட்சை பாத்திரமும், பார்வதி பிட்சை அரிசியும் அளித்தனர்.) அதன் பின்னர் நீ உனது அக்னி ஹோமத்தைச் செய்தாய். தொடர்ந்து, மகாபலி நடத்தும் அச்வமேத யாகம் நடைபெறுகின்ற இடத்தை நோக்கி புறப்பட்டாள்.
7. காத்ரேண பாவி மஹிமோசித கௌரவம் ப்ராக்
வ்யா வ்ருண்வதா இவ தரணீம் சலயந் அயாஸீ:
சத்ரம் பரோஷ்மதிரணார்த்தம் இவ ஆததாந;
தண்டம் ச தானவ ஜனேஷு இவ ஸந்நிதாதும்
பொருள்: குருவாயூரப்பா! பின்னால் (சற்று நேரம் கழித்து) உனக்கு உண்டாகப் போகும் பெருத்த மகிமையை இப்போதே இந்தப் பூமி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உனது உடல் அசைவின் மூலம் பூமியை நடுங்கும்படி நடந்தாய். அரக்கர்களின் பெருமையை மறைப்பது போன்று உனது கைகளில் குடை இருந்தது. அசுரர்களை ஒடுக்குவதற்காக கையில் தண்டம் இருந்தது. இப்படியாக நீ சென்றாய்.
8. தாம் நர்மதோத்தரதடே ஹயமேதசாலாம்
ஆஸேதுஷி த்வயி ருசா தவ ருத்ததேத்ரை:
பாஸ்வாந் கிம் ஏஷ: தஹனோ நு ஸநத்குமாரோ
யோகீ நு கோ அயம் இதி சுக்ரமுகை: சசங்கே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நர்மதை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த அந்த அச்வமேதயாக சாலையை நீ அடைந்தாய். அப்போது உனது உடலில் இருந்து தோன்றிய ஒளி மிகவும் ப்ரகாசமாக இருந்தது. அந்த ஒளியால் தங்கள் கண்கள் கூசியதால் பார்வை தடுக்கப்பட்டு விளங்கிய சுக்ராச்சாரியார் போன்ற முனிவர்கள் உன்னைக் கண்டு, இந்தச் சிறுவன் யார்? சூரியனா, அக்னி தேவனா? முனிவரான ஸனத்குமாரரா? என்று சந்தேகம் கொண்டனர்.
9. ஆநீதம் ஆசு ப்ருகுபி: மஹஸா அபிபூதை:
த்வாம் ரம்யரூபம் அஸுர: புலகாவ்ருதாங்க:
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருத: பரிபூஜ்ய பாதௌ
தத்தோயம் அந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம்
பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய ஒளியைக் கண்டு திகைத்து நின்ற சுக்ராச்சாரியார் போன்றவர்கள் சுதாரித்துக் கொண்டு உன்னை வரவேற்றனர். மிகுந்த அழகிய உருவம் படைத்த உன்னைக் கண்டவுடன் மஹாபலிக்கு மெய் சிலிர்த்தது. அவள் விரைந்து உன்னிடம் வந்து உனது திருவடிகளை நீரில் கழுவினான். எந்தவித சுத்தமான நீரையும் புனிதமாக்கும் அந்த நீரை (உனது திருவடிகள் கழுவப்பட்ட நீர்) தனது தலைகளில் தெளித்துக் கொண்டான்.
10. ப்ரஹ்லாத வம்ச ஜதாய க்ரதுபி: த்வஜேஷு
விச்வாஸத: து ததிதம் திதிஜோபி லேபே
யத்தே பதாம்பு கிரீசஸ்ய சிரோ பிலால்யம்
ஸ த்வம் விபோ குருபுராலய பாலயேதா:
பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! உனது பாதங்கள் கழுவப்பட்ட நீரானது சிவனின் தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு உயர்ந்தது. (சிவனின் தலையில் உள்ள கங்கை விஷ்ணுவின் பாதங்களில் இருந்து தோன்றியது.) அத்தனை உயர்வான நீரை திதியின் மகனான அசுரன் தனது தலையில் தெளித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்றால் - அது அவன் ப்ரஹ்லாதனின் குலத்தில் தோன்றியதால் அல்லது யாகம் செய்தால் அல்லது ப்ராமணர்களை மதிப்பதால் ஆகும். இவ்வாறு அவனுக்கு அருள் புரியும் ஸ்ரீ அப்பனே! என்னையும் காக்க வேண்டும்.