ஏர்வாடி : கோதைசேரி சந்தண மாரியம்மன் கோயிலில் ஆடி கொடைவிழா வரும் 18ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கோதைசேரி சந்தண மாரியம்மன் கோயில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும். அதன்படி இந்தாண்டு கொடை விழா வரும் 18ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் வெகுவிமர்சையாக நடக்கிறது. முதல்நாள் நிகழ்ச்சியாக வரும் 18ம் தேதி மாலை 6 மணிக்கு நம்பி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். இரவு 9 மணிக்கு மாக்காப்பு பூஜை நடக்கிறது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரண்டாம் நாள் 19ம் தேதி காலை 8 மணிக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து தெருபவனி வந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகத்துடன் பால் அபிஷேக சிறப்பு பூஜை, கும்பாபிஷேக பூஜை நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்பாளுக்கு பூமாலை சூட்டி வந்து சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. இரவு 1 மணிக்கு சாமபடைப்பு தீபாராதனை பூஜை நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு பூக்கொடை வரத்து பூஜை நடக்கிறது. மூன்றாம் நாள் 20ம் தேதி காலை 10 மணிக்கு கும்பம் எடுத்து தெருபவனி வந்து மஞ்சள் நீராடல், மதியம் 2 மணிக்கு பூஜையுடன் கொடைவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோதைசேரி யாதவ சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.