பதிவு செய்த நாள்
14
ஜூலை
2011
11:07
களக்காடு : களக்காடு சத்யவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. களக்காட்டில் 11ம் நூற்றாண்டு சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது சத்யவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் (பெரிய கோயில்) கோயில். இக்கோயில் ராஜகோபுரம் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருந்து வந்தது. களக்காடு பக்தர் பேரவையினர் இக்கோயில் திருப்பணியை 80 லட்ச ரூபாய் செலவில் மேற்கொண்டனர்.இதை தொடர்ந்து ராஜகோபுரம், கோயிலில் உள்ள சத்யவாகீஸ்வரர், கோமதிஅம்பாள், நவநீதகிருஷ்ணர் மற்றும் கொடிமர சன்னதி கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் யாவும் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (14ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு கடந்த 11ம் தேதி மாலையில் முதல்யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 2ம் காலயாகசாலை பூஜை துவங்கியது. மாலையில் 3ம் காலயாகசாலை பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 4ம் காலயாக சாலை பூஜையும், மாலை 5ம் காலயாகசாலை பூஜையும் நடந்தது.இன்று (14ம் தேதி) காலை காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை நடைபெற்றது. பின் ஜப ஹோமங்கள், பிம்பசுத்திகரணம், தேவதைகளுக்கு ப்ராணகலா பிரதிஷ்டை, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு பின் காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோமதி அம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர், மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, நடராஜர், நவநீதகிருஷ்ண சுவாமி, லட்சுமி, சரஸ்வதி, தட்சணாமூர்த்தி, பைரவர் முதலான பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மகா அபிஷேகம் போன்ற பூஜைகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர் பேரவையினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.