தென்காசி : இலஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது.இலஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் லட்சார்ச்சனை நடந்தது. காலையில் லட்சார்ச்சனை துவக்கம், மதியம் சிறப்பு பூஜை, மாலையில் சிறப்பு சமய சொற்பொழிவு, இரவு லட்சார்ச்சனை நிறைவு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.இரண்டாம் நாள் காலையில் வருஷாபிஷேகம் நடந்தது. இரவு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் வளாகத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் சுவாமி, அம்பாள் மணமக்கள் அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு ஹோமங்கள் நடந்தது. மாங்கல்யத்தை பக்தர்கள் வணங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு மூலஸ்தானத்தில் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சிறப்பு மேடையில் உற்சவர்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அம்மி மிதித்தல், நலுங்கு பார்த்தல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.