Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமய பேதங்கள் சமய பேதங்கள்
முதல் பக்கம் » ராமகிருஷ்ண உபநிஷதம்
ராமகிருஷ்ண உபநிஷதம்: பரம்பொருள்
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண உபநிஷதம்: பரம்பொருள்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
05:07

ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ரிஷிகளைப் போன்ற தபோதனர் ஒருவர் நம்முடைய காலத்தில் அவதரித்தார். அவரே ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவர், நூல் ஏதும் எழுதவில்லை; பிரசங்கமும் செய்யவில்லை; சுத்த சன்னியாச வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். பக்தியுடன் பக்கத்தில் உட்கார்ந்து கேட்ட சீடர்களுடன் பேசிய பேச்சே அவருடைய உபதேசம். அப்படி அவர் பேசியதைக் கேட்ட சீடர்கள் பிறகு அந்த உபதேசங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

படித்தவர்களும் நன்றாக எழுதத் தெரிந்தவர்களும் மிக நல்ல வியாசங்களையும் உபதேசங்களையும் எழுத முடியும்; அம்மாதிரி பலர் எழுதியும் வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கு உண்மையான வேகம் இல்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் தம் உள்ளத்திலும், வெளி உலகத்திலுள்ள எல்லாப்பொருள்களிலும் பகவானைக் கண்ட மகான். நாம் ஒருவரை யொருவர் பார்க்கும் போது எவ்வளவு நிச்சயமும் உறுதியும் நிறைந்த உணர்வோடு பார்க்கிறோமோ, அவ்வாறு ராமகிருஷ்ணர் எல்லாப் பொருள்களிலும் பகவானைக் கண்டார். இத்தகைய அற்புத ஞானிகள் பலநாடுகளில் அவ்வப்போது அவதரிக்கிறார்கள்.

தெய்வீக வாழ்க்கை வாழ்ந்த மக்களின் பேச்சுக்கே ஒரு தனியான வேகம் உண்டு. அவர்களுடைய உபதேச மொழிகளுக்கு உள்ள சக்தி வெறும் படிப்பும். அறிவும் படைத்தவர்களின் தருமோபதேசத்துக்கு இருப்பதில்லை. மகரிஷிகள் பேசும்போது அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் பேசுகிறது; அறிவுமட்டுமல்ல, மீமாம்ச வாதங்களும் விமரிசனங்களும் எவ்வளவு அழகாகவும் பொருட்செறிவு கொண்டனவாகவும் இருந்தாலும் ஆண்டவன் அருள்பெற்ற மகான்களின் சம்பாஷணைகளில் காணும் வேகத்துக்கு ஈடாகாது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் இத்தகைய உபதேச மொழிகளைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று. அவருடைய அவதார விழாவன்று இந்த வருஷம் சென்னை ராமகிருஷ்ண மடத்தார் என்னை அக்கிராசனம் வகிக்கச் சொன்னதை ஒப்புக்கொண்டு சபையில் பேசியபோது எனக்கு இந்த  எண்ணம் உதயமாயிற்று. தமிழில் வெளியாகியிருக்கும் பல நூல்களின் மூலம் பகவான் ராமகிருஷ்ணருடைய உபதேசங்களைத் தமிழ் மக்கள் அறிவார்கள். ஆயினும் அவற்றிலிருந்து எடுத்து மறுமுறை நான் சொல்லலாம் என்று ஆரம்பிப்பது என் சொந்த உள்ள மகிழ்ச்சிக்காகவே. வியாசர் விருந்தும் அப்படித்தான் ஆரம்பித்தேன். அது ஓரளவு பிறருக்கும் பயன்பட்டதாக எண்ணுகிறேன். அவ்வாறு இதுவும் ஒருவேளை பயன்படலாம்.

நம்முடைய சமூகம் சுதந்திர வாழ்க்கை அடைந்து விட்டது. சுதந்திரத்துடன் சுகமும் பெறவேண்டுமானால் மக்கள் அறவழியில் நிற்கவேண்டும்; நின்றால் சுகமும் நிகரற்ற புகழும் பெறுவோம்.  கடவுளாவது! சாமியாவது! என்று பலர் இந் நாட்களில் தைரியமாகப் பேசுகிறார்கள். இது நம்முடைய துர்ப்பாக்கியம். நாம் காணும் உலகமும் அற்புதப் பொருள்களும் வேகங்களும் ஒன்றினின்று ஒன்று உண்டாவதைக் காண்கிறோம். எல்லாம் நியதியின்படி நடைபெற்றும் சுழன்றும் வருகின்றன. நியதி தானாக உண்டாகிவிடுமா? அனைத்துக்கும் காரணமான ஒரு வித்து இல்லாமல் இவ்வளவு உண்டாவதற்கில்லை. சூன்யத்தினின்றும் பொருளோ வேகமோ நியதியோ உண்டாகாது அல்லவா? நாம் கிரகித்துக்கொண்டு விமரிசனம் செய்யக்கூடாத தன்மை படைத்த ஒரு காரணம் இருந்தே தீரவேண்டும். அதுவே பரம்பொருள். நியதி, இயற்கையாகவே இருக்கிறது. அதற்குக் கடவுள் வேண்டியதில்லை என்று வாதித்துக் கடவுளுக்குப் பதிலாக இயற்கையைக் கொண்டாடுவதில் சாரம் ஒன்றுமில்லை.

கண்ணுக்குக் காணப்படவில்லை என்பது கடவுள் இல்லை என்பதற்கு ஒரு காரணமாகுமா? இரவில் நட்சத்திரங்கள் திரள் திரளாகக் காணப்படுகின்றன. பகலில் எல்லாம் மறைந்து போகின்றன. கண்களைக்கொண்டு காணாத பொருள்கள் இல்லவே இல்லையென்று சாதிக்க முடியுமா? நம்முடைய அறிவின் வாழ்க்கையில் கடவுளைக் காணவில்லை என்கிற காரணத்தினால் கடவுளை இல்லை. கடவுளுக்கு அவசியமும் இல்லை என்று சாதிக்க வேண்டாம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் சொன்னார்: பட்டணத்துக்கு ஒருவன் வந்து இறங்கினதும் முதலில் ஒரு இடம் தேடி மூட்டை மூடிச்சுகளை வைத்துவிட்டுப் பிறகு ஊர் பார்க்கப் போகிறான். பகலெல்லாம் சுற்றித் திரிந்துவிட்டு இரவு வந்ததும் தான் ஏற்படுத்திக் கொண்ட விடுதிக்குப் போய் படுக்கிறான். இப்படி முன்னாலேயே தங்குவதற்கு ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டிராவிட்டால், பகலெல்லாம் வேடிக்கையாகக் கழித்துவிட்டு இரவில் தங்க இடமின்றி மிகவும் கஷ்டப்படுவான். உலகெல்லாம் சுற்றி அலையும் உள்ளத்துக்கு ஒரு தங்குமிடம் கடவுள். அந்த விடுதியைப் பத்திரப்படுத்திக் கொள்ளுவது க்ஷேமம். இல்லாவிடில் சந்தோஷமும் அமைதியும் கெட்டுத் துக்கப்படுவோம். மகனே! வாழ்க்கையின் சந்தோஷம் முடிந்து அந்த காரம் மூடிக்கொள்ளும் காலம் வரும். அபபோது நிம்மதியைக் காண ஒரு புகலிடம் வேண்டும். கடவுளாகிய விடுதியின் அவசியத்தை உணர்வோகமாக.

குடிப்பதற்குத் தண்ணீர் மொள்ளும்போது குளத்தினின்று லேசாக மேலேயுளள தெளிந்த தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, சேற்றைக் கலக்கித் தண்ணீரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. உள்ளம் தூய நிலையடைந்து தரும வாழ்க்கை வாழ விரும்பினால், பக்தியை உறுதியாகக்கொண்டு தியானமும் உபாசனையும் மெள்ள நடத்திக்கொண்டு போக வேண்டும். சாஸ்திரப் பிரவசனத்திலும் மீமாம்சங்களிலும் சமய தத்துவ வாதங்களிலும் காலம் கழித்து  மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நம்முடைய சிற்றறிவு சிறு குட்டைத் தண்ணீரைப் போன்றது. ரொம்பக் கலக்கிவிட்டால் சேறுதான் மேலே வரும்.

தயிருக்குள் வெண்ணெய் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தயிரைக் கடைந்தால்தான் வெண்ணெய் வருமே யொழிய, தயிரில் வெண்ணெய் இருக்கிறது  தயிரில் வெண்ணெய் இருக்கிறது என்று எவ்வளவு கத்தினாலும் வெண்ணெய் வராது. பரம்பொருளைக் காண வேண்டுமானால் பக்தியுடன் உள்ளத்தில் விருப்பத்தைக் கடையவேண்டும். பரமாத்மா என்றும் ஜீவாத்மா என்றும் தத்துவம் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது தாயைக் காணாத குழந்தை தாயைக் காண விரும்பி வருந்துவதைப்போல் ஆண்டவனை அடைய உள்ளத்தில் உருக வேண்டும்.

 
மேலும் ராமகிருஷ்ண உபநிஷதம் »
temple news
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் ... மேலும்
 
temple news
பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு ... மேலும்
 
temple news
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் ... மேலும்
 
temple news
சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் ... மேலும்
 
temple news
பெண்ணாய்ப் பிறந்த எல்லோரும் தேவியினுடைய அம்சங்களே யன்றி வேறல்ல என்பது பகவான் ராம கிருஷ்ணர் அடிக்கடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar