பதிவு செய்த நாள்
15
ஜூலை
2011
11:07
திண்டுக்கல்: மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகினர். இதையடுத்து முக்கிய கோயில்கள், சர்ச்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில், கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்கள், பயணிகளின் உடமைகள், சந்தேகத்திற்கு இடமான பைகள், தபால் நிறுவனங்களின் பார்சல்கள் முழுமையாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் "மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. பழநி கோயிலில் பாதுகாப்பு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், தங்க கோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன், தேவஸ்தான அலுவலகம், தங்கும் விடுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மலைக்கோயிலுக்கு வரும் பயணிகள், தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றனர்.