நாளுக்கு நாள் வளரும் நலங்கள் செழித்தோங்க ஆளுக்கு ஒருகுறையை அவரவரும் நெஞ்சேந்திக் காலுக்கு பூசையிட்டுக் கதறுகிறோம் கருப்பய்யா! பாலுக்கு சீனியென வருவாய் இதுசமயம். (15)
தஞ்சமென வந்தவரைத் தாய்போல் காப்பவனே அஞ்சலெனக் கைகாட்டி ஆதரிக்கும் கருப்பண்ணனே! கெஞ்சுகிறோம் கதறுகிறோம் வந்திடுவாய் கருப்பண்ணனே! மஞ்சாகக் கீழிறங்கி வருவாய் இதுசமயம். (16)
எங்கே இருந்தாலும் எப்போ தழைத்தாலும் அங்கே எழுந்தோடி ஆதரிக்க வருபவனே! சிங்க முகத்தில் சிலிர்க்கின்ற மீசையுடன் இங்கே அழைக்கின்றோம் எழுவாய் இதுசமயம். (17)
நெடுமாலின் வரத்தாலே நிலம்காக்க வந்தவனே! அடுபகையால் வருந்தாமல் ஆதரிக்கும் தாயகமே கொடுவாளைக் கையேந்திக் குலம்காக்கும் கருப்பண்ணனே! இடியோசைக் குரலெழுப்பி வருவாய் இதுசமயம். (18)