பதிவு செய்த நாள்
08
ஆக
2015
11:08
ஆர்.கே.பேட்டை:ஆடி வெள்ளியை ஒட்டி, காமாட்சியம்மனுக்கு, காமதேனுவின் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் காமாட்சியம்மன் கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமை பன்னீரிலும்; இரண்டாம் வெள்ளிக் கிழமை சந்தனத்திலும்; மூன்றாம் வெள்ளிக் கிழமை குங்குமத்திலும் அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்காம் வெள்ளிக் கிழமையான நேற்று காலை, சாது சங்க மடத்தில், இருந்து, 1,008 பால் குடங்கள் ஊர்வலமாக சுமந்து வரப்பட்டன.
இதில், பிரதான பால்குடம், காமதேனு வாகனத்தில் உலா வந்தது. பகல், 12:00 மணியளவில், மூலவர் அம்மனுக்கு, பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 1,008 குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதே போல், அம்மையார்குப்பம் சத்தியம்மன் கோவிலில், காலையில், மஞ்சள் நீர் அபிஷேகமும், மாலையில் குத்துவிளக்கு பூஜையும் நடந்தன.