பதிவு செய்த நாள்
12
ஆக
2015
12:08
கும்பகோணம்: கும்பகோணம் ராமஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, யாகசாலை மற்றும் பந்தக்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ராமஸ்வாமி கோவில், தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால், 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோவிலின் வெளிமண்டபத்தில், 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைபாடுகளுடன் கலைக்கோவிலாகவும், உள் பிரகாரத்தில் ராமாயண ஓவியங்களுடன் அமைந்துள்ளது. சிறப்புகள் பெற்ற இக்கோவிலில், மகாமக திருவிழாவை முன்னிட்டு, ஒரு கோடி மதிப்பீட்டில், மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதையடுத்து, ராம சரணம் அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை நிதியுதவியுடன் கோவிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்டவை திருப்பணி செய்வதற்காக, பாலாலயம் செய்யப்பட்டது. இத்திருப்பணிகளை, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்து, செப்டம்பர், 9ம் தேதி மகாகும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்திற்காக, பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பந்தக்கால் அமைக்கும் பணியில், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.