பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில் தேர் திருவிழாவில், குதிரை மற்றும் மாட்டுச்சந்தை, நேற்று கோலாகலமாக துவங்கியது. தமிழகம் உள்பட தென்னிந்திய அளவில், பிரசித்த பெற்ற, ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, குதிரை மற்றும் மாட்டுச் சந்தை நேற்று துவங்கியது. காலை, 10 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், காமாட்சியம்மன், பெருமாள் ஸ்வாமி, குருநாத ஸ்வாமி ஆகியோர், தேரில் வனக்கோவிலுக்கு சென்று திரும்பினர். ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, இன்று (ஆக., 13) முதல், 15ம் தேதி வரை, மூன்று நாட்களும் மூலஸ்தான மண்டப கோவிலில், ஸ்வாமிகள் திவ்ய தரிசனம் கொடுக்கின்றனர்.
குதிரை மற்றும் மாட்டுச்சந்தை: பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை சந்தை நடப்பது தனிச்சிறப்பு. வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து உயர் ரக மாடுகள், குதிரைகள், ஆடுகள், பறவைகள் என, விற்பனை மற்றும், கண்காட்சிக்காக அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்துள்ளனர். அதில், பர்கூர் இன செம்மறை மாடுகள், காங்கேயம் காளைகள், ஓங்கோல் எனும் ஆந்திர மாடுகள், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட குள்ள ரக மாடுகள், நாட்டு மாடுகள், ஜெர்சி, சிந்து போன்ற கலப்பின மாடுகளும், காட்டியவாடி, மார்வார் எனப்படும் உயர்ரக குதிரைகள், சாதாரண குதிரைகள், வெளிநாட்டு ஆடுகள், நான்கு கொம்புள்ள அதிசய ஆடு, பேசும் ஆஸ்திரேலியா கிளி, வெளிநாட்டு நாய்கள், பூனைகள் என, ஏராளமான பறவை மற்றும் விலங்கினங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. தவிர, மாடு மற்றும் குதிரைகளுக்கு தேவையான சாட்டைகள், கயிறு, சலங்கை, கழுத்து பட்டை, அலங்கார துணிகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு உள்ளன. வரும், 16ம் தேதி வரை இச்சந்தையுடன், திருவிழாவும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையும் களை கட்டும்.