வெண்ணைமலை ஆஞ்சநேயர் அம்மன் வேடத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2011 11:07
கரூர்: ஆடி திருவிழாவையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். வெண்ணைமலை ஸ்ரீ ஆத்ம நேச ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு அம்மன் அலங்காரம் நடந்தது. தமிழ் மாதங்களில் அம்மன் விழாக்களுக்கு உகந்த மாதம் என்றழைக்கப்படும் ஆடி மாதம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் காவிரியாற்றில் புனித நீராடி, கரையோரத்தில் உள்ள கோவில்களில் பயபக்தியுடன் ஸ்வாமி கும்பிட்டனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், தாந்தோணி மலை கல்யாண வெங்கட்ராம பெருமாள் கோவில், வெண்ணைமலை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை சிறப்பாக நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி வெண்ணைமலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ துவனியாத்ம சக்தி ஸப்தகர் ஜெயராம், ஆலய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.