பதிவு செய்த நாள்
17
ஆக
2015
11:08
சென்னை: மயிலாப்பூரில், பழமைவாய்ந்த முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நேற்று நடந்த, 1,008 பூச்சொரிதல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். உலக நன்மை கருதியும், மழை வேண்டியும், பல வாசனை புஷ்பங்கள், 1,008 கூடையில் எடுத்து, 1,008 மகளிர் வீதி வலம் வந்து, மூலவர் அம்பாளுக்கு நேரடியாக பூக்களை சொரிதல் விழா நடத்தப்படுகிறது.
திருவீதி உலா: இந்த விழாவை முன்னிட்டு, நேற்று மதியம், 1:00 மணியள வில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணியளவில், உற்சவர் மகாலட்சுமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சொரிதல் நிகழ்ச்சி முடிந்ததும், 300 ரூபாய்- கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அம்பாளுக்கு சாற்றிய புடவை ஒன்றும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு, மஞ்சள், வளையல் மற்றும் நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணியளவில், பாரம்பரிய இசை வாத்தியங்களுடன், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா வந்தார். விழா ஏற்பாடுகளை, துணை ஆணையர் கோதண்டராமன், செயல் அலுவலர்
சந்திரசேகரன் செய்து இருந்தனர்.
சீமந்த நலங்கு வைபவம்: மடிப்பாக்கம் அடுத்த, கைவேலி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதில், அம்மனிடம் வேண்டியது நிறைவேறியதாக, 4 அடி உயர கட்டைகளை காலில் கட்டிக்கொண்டு சென்று, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் தங்கள் மார்பில், எலுமிச்சை பழங்களை நுாலில் கோர்த்து ஊசியின் மூலம் தோளின் உள்ளே குத்திக் கொண்டனர்.
கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் தேவி கருமாரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு, 1,08,000 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 1,008 பெண் பக்தர்களால், அம்மனுக்கு சீமந்த நலங்கு வைபவம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கோமாதா பூஜையுடன் துவங்கிய விழாவில், 7:00 மணி முதல், 10:00 மணி வரை சீமந்த விழா நடந்தது. தாம்பரம், பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்மன் கோவில்களில், ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடந்தது.