பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், இரண்டு கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர், தன்வந்திரி ஆகிய சன்னிதிகள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது; இது தவிர, 48 உபசன்னிதிகளும் உள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, 2001 மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி, கோயிலுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அதனால், இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு, கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், விரைவில், இரண்டு கட்டமாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 48 உப சன்னிதிகளுக்கு, செப்டம்பர், 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.