மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆனிமாத தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.வைணவ திருக்கோவிலில் 12 மாதமும் திருவிழா காணும் சிறப்பை பெற்றது மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலாகும்.ஆடி தேர் தாயாருக்கும், பங்குனி தேர் பெருமாளுக்கும் இரண்டு தேர் திருவிழா நடப்பது போல பங்குனியில் கிருஷ்ண தீர்த்த தெப்பமும், ஆனியில் ஹரித்திரா நதி தெப்பமும் நடப்பது குறிப்பிடத்தக்கது.ஹரித்திரா என்ற சொல்லுக்கு மஞ்சள் என்ற பொருள் நிறைந்த மஞ்சள் நீரில் ஆயிரம் கோபிமார்களுடன் ஜலகிரிடை செய்த ஹரித்தரா நதியில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கிருஷ்ணன் திருக்கோலத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் தெப்பத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தெப்பத்தில் தோன்றி எம்பெருமான் ஹரித்திரா நதியை மூன்று முறை வலம் வந்து விடியற்காலை ஐந்து மணியளவில் திருகோவில் சென்று அடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.