பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
1. ஸ்நிக்தாம் முக்தாம் ஸததம் அபி தாம் ஸாலயந் ஸத்யபாமாம்
யாத: பூய: ஸஹ கலு தயா யாஜ்ஞஸேநீ விவாஹம்
பார்த்த ப்ரீத்யை புந: அபி மநாக் அஸ்தித: ஹஸ்தி புர்யாம்
சக்ர ப்ரஸ்தம் புரம் அபி விபோ ஸம்விதா ஆகத: அபூ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! உன்னிடம் மிகுந்த காதலும் அழகும் உடையவளான ஸத்யபாமாவை நீ மகிழச் செய்தாய். அவளை உடன் அழைத்துக் கொண்டு திரௌபதியின் திருமணத்திற்குச் சென்றாய். பின்னர் பாண்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹஸ்தினாபுரத்தில் சில நாட்கள் தங்கினாய். அதன் பின்னர் இந்திரப்ரஸ்தம் என்ற ஓர் அழகான நகரத்தை பாண்டவர்களுக்காக உருவாக்கிக் கொடுத்து விட்டு துவாரகை திரும்பினாயாமே!
2. பத்ராம் பத்ராம் பவத் அவரஜாம் கௌரவேண அர்த்யமாநாம்
த்வத் வாசா தாம் அஹ்ருத குஹநா மஸ்கரீ சக்ர ஸுநு:
தத்ர க்ருத்தம் பலம் அநுநயந் ப்ரத்யகா: தேந ஸார்த்தம்
சக்ர ப்ரஸ்தம் ப்ரிய ஸக முதே ஸத்யபாமா ஸஹாய:
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய தங்கையும், மிகுந்த அழகானவளும் ஆகிய சுபத்ரை மேல் துரியோதனன் விருப்பம் கொண்டான். ஆனால் உனது ஆலோசனைப்படி அர்ஜுனன் ஒரு துறவி போன்ற வேடம் பூண்டு வந்து அவளைக் கவர்ந்து சென்றான். இதனால் பலராமனுக்கு மிகுந்த கோபம் உண்டாகவே, அவனை நீ சமாதானம் செய்தாய். பின்னர் உனது நண்பனான அர்ஜுனன் கேட்டுக் கொண்டபடி பலராமனோடும், ஸ்த்யபாமாவோடும் ஹஸ்தினாபுரம் சென்றாய் அல்லவா?
3. தத்ர க்ரீடந் அபி ச யமுநா கூல த்ருஷ்டாம் க்ருஹீத்வா
தாம் காளிந்தீம் நகரம் அகம: காண்டவ ப்ரீணித் அக்னி:
ப்ராத்ரு த்ரஸ்தாம் ப்ரணய விவசாம் தேவ பைத்ருஷ்வஸேயீம்
ராஜ்ஞாம் மத்யே ஸபதி ஜஹிஷே மித்ரவிந்தாம் அவந்தீம்
பொருள்: குருவாயூரப்பா! ஹஸ்தினாபுரத்தில் நீ பாண்டவர்களுடன் விளையாடி மகிழ்ந்தாய். பின்னர் காண்டவ வனத்தை அக்னி தேவனுக்கு இரையாக அளித்தாய். யமுனையின் கரையில் காளிந்தி என்பவளைக் கண்டு அவளை உனது மனைவியாக்கிக் கொண்டு துவாரகை திரும்பினாய். அவந்தி நாட்டின் அரசன் மகளும், உனது அத்தை மகளும் ஆகிய மித்ரவிந்தை என்பவள் உன் மீது காதல் கொண்டிருந்தாள். இருப்பினும் தனது சகோதரர்களுக்குப் பயந்து தனது எண்ணத்தை வெளிக்காட்டாமல் இருந்தாள். இதனால் துன்பமுற்று இருந்த அவளை, பல அரசர்கள் வீற்றிருந்த சபையில் இருந்து கவர்ந்து சென்றாயாமே!
4. ஸத்யாம் கத்வா புந: உதவஹ: நக்நஜித் நந்தநாம் தாம்
பத்வா ஸப்த அபி ச வ்ருஷ வரான் ஸப்த மூர்த்தி: நிமேஷாத்
பத்ராம் நாம ப்ரதது: அத தே தேவ ஸந்தர்த்தந ஆத்யா:
தத் ஸோதர்யா வரத பவத: ஸா அபி பைத்ருஷ்வ ஸேயீ
பொருள்: வரம் அளிப்பவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஒரு முறை கோஸலை நாட்டிற்குச் சென்றாய். அங்கு நக்னஜித் என்ற அரசன் தனது மகளான ஸத்யாவை மணக்க பந்தயமாக ஏழு எருதுகளை அடக்க வேண்டும் என்று போட்டி வைத்தான். நீ உனது உருவத்தை ஏழு உருவங்களாக எடுத்துக் கொண்டு விரைவாக அந்த ஏழு எருதுகளை அடக்கினாய். பின்னர் அவர் மகளை மணம் முடித்தாய். கேகய நாட்டின் ஸந்தர்த்தனன் என்பவன் தனது சகோதரியான பத்ரா என்பவளை உனக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவளும் உனக்கு ஓர் அத்தை மகள் அல்லவோ?
5. பார்த்த ஆத்யை: அபி அக்ருத லவநம் தோய மாத்ரம அபி லக்ஷ்யம்
லக்ஷம் சித்வா சபரம் அவ்ருதா லக்ஷணாம் மத்ர கந்யாம்
அஷ்டௌ ஏவம் தவ ஸம்பவந் வல்லபா: தத்ர மத்யே
சுச்ரோத த்வம் ஸுரபதி கிரா பௌம துச்சேஷ்டிதாந்
பொருள்: குருவாயூரப்பா! மந்திர நாட்டின் அரசன் மீன் இலக்கு ஒன்றின் பிம்பத்தை நீரில் பார்த்து அம்பு எய்து அறுக்க வேண்டும் என்றும், அந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கே தனது மகளான லக்ஷ்மணை என்றும் அறிவித்தான். அந்த இலக்கு அர்ஜுனனால் கூட எட்ட இயலாது இருந்தது. நீ அதனை அறுத்து அவளை மணம் முடித்தாய். இப்படியாக நீ எட்டு மனைவிகளைக் கொண்டிருந்தாய். அப்போது உன்னிடம் இந்திரன், நரகாசுரன் என்பவனின் கொடுமைகளைக் கூறினானாமே!
6. ஸம்ருத ஆயாதம் பக்ஷி ப்ரவரம் அதிரூட: த்வம் அகம:
வஹந் அங்கே பாமா உபவநம் இவ அராதி பவநம்
விபிந்தன் துர்க்காணி த்ருடித ப்ருதநா சோணித ரஸை:
புரம் தாவத் ப்ராக்ஜ்யோதிஷம் அகுருதா: சோணித புரம்
பொருள்: குருவாயூரப்பா! நீ உடனே கருடனை நினைத்தாய். பறவைகளின் அரசனான கருடன் உடனே வந்தான். அதன் மீது ஏறி அமர்ந்தாய். ஸத்யபாமாவை உனது மடியின் மீது உட்கார வைத்துக் கொண்டாய். ஏதோ ஒரு நந்தவனம் செல்வதுபோல் உற்சாகத்துடன் நரகாசுரன் இருப்பிடம் சென்றாய். அங்கு இருந்த அவனது கோட்டைகளை உடைத்தாய். அவனது படைகளை அழித்தாய். அந்தப் படைவீரர்களின் இரத்தத்தால் ஜ்யோதிஷம் என்ற பெயர் கொண்ட அந்த நகரம், சோணிதபுரம் (இரத்தம் நிறைந்த புரம்) என்றான தாமே!
7. முர: த்வாம் பஞ்ச ஆஸ்ய: ஜலதிவந மத்யாத் உதபதத்
ஸ: சக்ரே சக்ரேண ப்ரதலித சிரா: மங்க்ஷு பவதா
சது: தந்தை: தந்தாவல பதிபி: இந்தாந ஸமரம்
ரதாங்கேந சித்வா நரகம் அகரோ: தீர்ண நரகம்
பொருள்: குருவாயூரப்பா! (அந்த நரகாசுரனுக்கு உதவுவதற்காக) ஐந்து தலைகளை உடைய முரன் என்ற அசுரன் கடலின் நடுவில் இருந்து கிளம்பி உன்னைத் தாக்கினான். உனது சக்ராயுதம் கொண்டு அவன் தலைகளை அறுத்தாய். பின்னர் போர் செய்வதில் மிகுந்த விருப்பம் உடைய நரகன் என்பவன், தனது நான்கு தந்தங்களை உடைய யானைப் படையுடன் உன்னை எதிர்த்தான். நீண்ட நேர போருக்குப் பிறகு ஸுதர்ஸனம் என்ற உனது சக்கரத்தால் அவன் தலையை அறுத்தாய். அவனை தீர்ண நரகனான (மோட்சம் அடைந்த நரகன்) மாற்றினாயாமே!
8. ஸ்துத: பூம்யா ராஜ்யம் ஸபதி பக தத்தே அஸ்ய தநயே
கஜம்ச ஏகம் தத்வா ப்ரஜிகயித நாகாந் நிஜ புரம்
கலேந ஆபத்தாநாம் ஸ்வ கத மநஸாம் ஷோடச புந:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாம் அபி ச தந ராசிம் ச விபுலம்
பொருள்: குருவாயூரப்பா! அப்போது நரகனின் தாயான பூதேவி உன்னைத் துதித்தாள். நீ மகிழ்ந்து நரகனின் மகனான பகதத்தன் என்பவனிடம் நாட்டையும், ஒரு யானையையும் அளித்தாய். பின்னர் மற்ற யானைகள் அனைத்தையும், மிகுந்த செல்வங்களையும், உன்மீது மனதை உடையவர்களும், நரகனால் சிறை பட்டிருந்தவர்களும் ஆகிய பதினாயிரம் பெண்களையும் துவாரகைக்குக் கொண்டு சேர்த்தாய்.
9. பௌம அபாஹ்ருத குண்டலம்
தத் அதிதே: தாதும் ப்ரயாத: திவம்
சக்ர ஆத்யை: மஹித: ஸமம் தயிதயா
த்யு ஸ்த்ரீஷு தத்தஹ்ரியா
ஹ்ருத்வா கல்பதரும் ருஷா அபிபதிதம்
ஜித்வா இந்த்ரம் அப்யாகம:
தத் து ஸ்ரீமத தோஷ ஈத்ருச இதி வ்யாக்
யாதும் ஏவ அக்ருதா:
பொருள்: குருவாயூரப்பா! முன்பு ஒரு முறை அதிதியிடம் இருந்து நரகாசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட குண்டலங்களை மீண்டும் அவளிடமே கொடுக்க நீ விரும்பினாய். ஆகவே, தேவலோகப் பெண்களே வெட்கப்படும் அளவிற்கு அழகுடைய ஸத்ய பாமாவுடன் இந்திரலோகம் சென்றாய். உன்னைக் கண்ட இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் துதித்தனர். அங்கிருந்த கற்பக மரம் தனக்கு வேண்டும் என்று ஸத்யபாமா கேட்டதனால் அதனை நீ எடுக்க முயன்றாய். அப்போது இந்திரன் உன்னைத் தடுத்தான். அவனை வென்று நீ துவாரகை திரும்பினாய். செல்வத்தால் உண்டாகும் கர்வம் எத்தகைய இழிவானது என்று உலகிற்கு உணர்த்தவே நீ இந்திரனிடம் நாடகம் ஆடினாய் அல்லவா?
10. கல்ப த்ரும் ஸத்யபாமா பவந புவி ஸ்ருஜந்
த்வி அஷ்ட ஸாஹஸ்ர யோஷா:
ஸ்வீக்ருத்ய ப்ரத்யகாரம் விஹித பஹு
வபு: லீலயந் கேளி பேதை:
ஆச்சர்யாத் நாரத ஆலோகித விவித கதி:
தத்ர தத்ர அபி கேஹே
பூய: ஸர்வாஸு குர்வந் தச தச
தநயாந் பாஹி வாத ஆலய ஈச:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் கற்பக மரத்தை ஸத்யபாமாவின் வீட்டின் பின்புறத்தில் நட்டு வைத்தாய். பின்னர் (நரகனிடம் இருந்து மீட்ட) பதினாயிரம் பெண்களையும் திருமணம் செய்து கொண்டாய். அவர்களைக் தனித்தனியாக வசிக்க வைத்து, நீயும் அத்தனை வடிவங்கள் எடுத்து அவர்களை மகிழ வைத்தாயாமே! எப்படி ஒரே க்ருஷ்ணன் இத்தனை பேரை மணக்க இயலும் என்று நாரதர் வியந்து உன்னைக் காண வந்தார். அவர் உன்னை ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த வீட்டில் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாராமே! ஒவ்வொரு மனைவிக்கும் நீ பத்துப் பிள்ளைகள் அளித்தாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.