பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ஆர்ச்கேட் அருகே ஆர்ய வைஸ்ய சமூகத்திற்குச் சொந்தமான நந்தவனத்தில் உள்ள விநாயகர், அஷ்டபுஜ துர்க்கையம்மன், நாகர்கள், ஆஞ்சநேய சுவாமிகள், ராகவேந்திரா சுவாமிகள் மற்றும் தன்வந்தரி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 19ம் தேதி காலை கோபூஜை, யாக சாலை பூஜையுடன் துவங்கியது. மாலை பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. 20ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை சாத்து முறை நடந்தது. நேற்று (21ம் தேதி) காலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து 6:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 6:30 மணிக்கு துர்க்கையம்மன் கோவில் கோபுரத்திலும், 7:00 மணிக்கு விமான சம்ப்ரோஷணம், 7:15 மணிக்கு பெருமாள் கோவில் கோபுரத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.