பதிவு செய்த நாள்
24
ஆக
2015
12:08
ஊத்துக்கோட்டை : பவானியம்மன் கோவிலில், பக்தர்கள் நேற்று, வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா, கடந்த மாதம், 18ம் தேதி துவங்கியது. இதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை தரிசனம் செய்து வருகின்றர். நேற்று, ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கி, நேற்று காலை, வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகளவு வாகனங்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக, ஊத்துக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.