பதிவு செய்த நாள்
27
ஆக
2015
05:08
1. வ்ருக ப்ருகு முநி மோஹிநீ அம்பரீஷ ஆதி வ்ருத்தேஷு
அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ சர்வ ஆதி ஜைத்ரம்
ஸ்திதம் இஹ பரம ஆத்மந் நிஷ்கல அர்வாக் அபிந்நம்
கிம் அபி யத் அவபாதம் தத்தி ரூபம் தவ ஏவ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரமாத்மா! உனது பெருமை என்பது வ்ருகாசுரன். ப்ருகு முனிவர், மோஹிநீ, அம்பரீஷன் ஆகியோரின் சரிதங்கள் மூலம் வெளிப்படுகிறது. உனது இந்த மேன்மை சிவன் முதலானவர்களின் மேன்மையை வெல்லக் கூடியது என்று உணர முடிகிறது. தொடக்கத்தில் முழுமுதலாக, எந்தவிதமான மாறுபாடுகளும் அடையாமல், விளக்க இயலாமல் எந்த ஒன்று இருந்ததோ, அதுவே உனது ரூபமாகும்.
2. மூர்த்தி த்ரய ஈச்வர ஸதாசிவ பஞ்சகம் யத்
ப்ராஹு: பராத்ம வபு: ஏவ ஸதாசிவ: அஸ்மிந்
தத்ர ஈச்வர: து ஸ விகுண்ட பத: த்வம் ஏவ
த்ரித்வம் புந: பஜஸி ஸத்ய பதே த்ரி பாகே
பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் பலரும் ப்ரும்மா, விஷ்ணு, சிவன், ஈச்வரன், ஸதாசிவன் என்று ஐந்து மூர்த்திகள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஸதாசிவம் என்று அனைத்திற்கும் ஆத்மாவாக நீயே உள்ளாய். ஈச்வரன் என்பதும் வைகுண்டத்தில் வாசம் செய்யும் நீயே ஆவாய். மூன்று லோகங்களாக உள்ள ஸத்யலோகம் வைகுண்டம், சிவலோகம் ஆகியவற்றில் விளங்கும் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் நீயே ஆவாய்.
3. தத்ர அபி ஸாத்விக தநும் தவ விஷ்ணும் ஆஹு:
தாதா து ஸத்வ விரள: ரஜஸா ஏவ பூர்ண:
ஸத்வ உத்கட த்வம் அபி ச அஸ்தி தம: விகார
சேஷ்டா ஆதிகம் ச தவ சங்கர நாம்நி மூர்த்தௌ
பொருள்: குருவாயூரப்பா! மூன்று மூர்த்திகளில் ஸத்வ குணம் மட்டுமே உள்ள உன்னை விஷ்ணு என்பார்கள். ஸத்வ குணம் குறைவாகவும் ரஜோ குணம் அதிகமாகவும் உள்ள மூர்த்தியை ப்ரும்மா என்கின்றனர். ஸத்வ குணம் அதிகமாக இருந்து தமோ குணமும் இருக்கும் மூர்த்தியை சிவன் என்று கூறுகின்றனர்.
4. தம் ச த்ரி மூர்த்தி அதிகதிகம் பர பூருஷம் த்வாம்
சர்வ ஆத்மநா அபி கலு ஸர்வ மயத்வ ஹேதோ:
சம்ஸந்தி உபாஸந விதௌ தத் அபி ஸ்வத: து
த்வத்ரூபம் இதி அதித்ருடம் பஹுந: ப்ரமாணம்
பொருள்: குருவாயூரப்பா! மூன்று மூர்த்திகளைவிட மேலானவனாக, பரம்பொருளாக, அனைத்திற்கும் அந்தர்யாமியாக, அனைத்துமே நீயாக உள்ளதால், உபாஸனை விதிகளின்படி உன்னைப் பரமேஸ்வரன் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் அதுவும் உனது வடிவமே என்பதற்கும் பல ஆதாரங்கள் உள்ளன.
5. ஸ்ரீ சங்கர: அபி பகவாந் ஸகலேஷு தாவத்
த்வாம் ஏவ மாநயதி ய: ந ஹி பக்ஷபாதீ
த்வந் நிஷ்டம் ஏவ ஸ: ஹி நாம ஸஹஸ்ரக ஆதி
வ்யாக்யத் பவத் ஸ்துதி பர: ச கதிம் கத: அந்தே
பொருள்: குருவாயூரப்பா! (இதனை உணர்ந்த காரணத்தால்தான்) ஆதி சங்கரர் மற்ற தெய்வங்களை விட உன்னையே போற்றினார். அவர் நடுநிலைமை இன்றி பேசுபவர் அல்லர், இதனால்தான் ஸஹஸ்ரநாமம், பகவத்கீதை முதலானவற்றுக்கு விளக்க உரை எழுதினார். இறுதிவரை உன்னையே வணங்கி மோட்சம் பெற்றார்.
6. மூர்த்தி த்ரய அதிகம் உவாச ச மந்த்ர சாஸ்த்ரஸ்ய
ஆதௌ கலாய ஸுக்ஷமம் ஸகல ஈச்வரம் த்வாம்
த்யாநம் ச நிஷ்கலம் அஸௌ ப்ரணவே கலு உக்த்வா
த்வாம் ஏவ தத்ர ஸகலம் நிஜகாத அந்யம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மேலும் காயாம்பூ போன்ற நிறம் உடையவனும், அனைத்திற்கும் ஈச்வரனாகவும் (சர்வேஸ்வரன்) உள்ள உன்னை, ஆதிசங்கரர் மந்திர சாஸ்திரத்தின் தொடக்கத்தில், ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை விட மேலானவன் என்றார். மேலும் ப்ரணவ மந்திரத்தின் முழுமுதற் கடவுள், த்யானத்தின் சாதனமாக உன்னையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும் கூறவில்லையே!
7. ஸமஸ்த ஸாரே ச புராண ஸங்க்ரஹே
விஸம்சயம் த்வந் மஹிமா ஏவ வர்ண்யதே
த்ரி மூர்த்தி யுக் ஸத்ய பத த்ரி பாகத:
பரம் பதம் தே கதிதம் ந சூலிந:
பொருள்: குருவாயூரப்பா! அனைத்துப் புராணங்களின் சாரத்தையும் கூறுகின்ற புராண ஸங்க்ரஹம் என்ற நூலில் உனது பெருமையே பேசப்பட்டுள்ளது. மூன்று மூர்த்திகள் உள்ள ஸத்ய லோகத்தைக் காட்டிலும், உனது வைகுண்டமே மேலானது என்று கூறப்பட்டுள்ளது. சூலம் ஏந்திய சிவனின் லோகம் கூறப்படவில்லை.
8. யத் ப்ராஹ்ம கல்ப: இஹ பாகவத த்விதீய
ஸ்கந்த உதிதம் வபு: அநாவ்ருதம் ஈச தாத்ரே
தஸ்ய ஏவ நாம ஹரி சர்வ முகம் ஜகாத
ஸ்ரீமாதவ: சிவ பர: அபி புராண ஸாரே
பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! தற்போது இயங்கிக் கொண்டுள்ள, ப்ரஹ்ம கல்பம் என்ற காலக்கட்டத்தின் தொடக்கத்தில், ப்ரும்மாவுக்கு நீ உனது திருமேனியைக் காண்பித்தாய். இந்த நிகழ்ச்சி ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது ஸ்கந்தத்தில் கூறப்பட்டது. ஸ்ரீமத்வாச்சாரியார் என்பவர் சிவன் அடியாராக இருந்தபோதிலும் தான் எழுதிய புராண ஸாரம் என்ற நூலில், நீ ப்ரும்மாவுக்குக் காண்பித்த அந்தத் திருமேனியே ஹரி, சிவன் என்று கூறுகிறார்.
9. யே ஸ்வ ப்ரக்ருதி அநுகுணா: கிரிசம் பஜந்தே
தேஷாம் பலம் ஹி த்ருடயா ஏவ ததீய பக்த்யா
வ்யாஸ: ஹி தேந க்ருதவாந் அதிகாரி ஹேதோ:
ஸகாந்த ஆதிகேஷு தவ ஹாநி வச: அர்த்தவாதை:
பொருள்: குருவாயூரப்பா! தங்கள் வினைப்பயன் காரணமாக சிவனை உபாஸிப்பவர்களுக்கு உண்டாகும் பயன் என்பது, சிவனிடம் அவர்கள் கொண்டுள்ள பக்தியால் விளைகிறது. இதனால்தான் வ்யாஸ முனிவர் ஸகந்தபுரணத்தில் சிவனை உயர்வாகவும், அர்த்தவாதமாக உன்னைத் தாழ்த்தியும் கூறினார். (அர்த்தவாதம் என்பது புகழ்வதற்காக ஒன்றை உயர்த்திக் கூறி மற்றதைத் தாழ்த்திக் கூறுவது ஆகும்).
10. பூத அர்த்த கீர்த்தி: அநுவாத வ்ருத்த வாதௌ
த்ரேதா அர்த்தவாத கதய: கலு ரோசந அர்த்தா:
ஸ்காந்த ஆதிகேஷு பஹவ: அத்ர விருத்த வாதா:
த்வத் தாமஸத்வ பரிபூத் உபசிக்ஷண ஆத்யா:
பொருள்: குருவாயூரப்பா! அர்த்தவாதம் என்பது மூன்று வகையாக உள்ளது. முன்பு நடந்ததைக் கூறுவது (பூத அர்த்த கீர்த்தி). ஒரு முறைக் கூறியதை மேலும் விளக்கமாகக் கூறுவது(அநுவாதம்), முரணான பொருள் கூறுவது (வ்ருத்த வாதம்) என்பதாகும். இவை மூன்றும் கூறப்படும் விவரங்களில் உள்ள பொருளின் தன்மையை சுவாரஸ்யப்படுத்தவே உள்ளன அல்லவா? ஆகவே ஸ்காந்தம் போன்றவற்றில் உனக்குக் கூறப்பட்ட தாமஸ குணம், தோல்வி முதலியவை வ்ருத்த வாதங்கள் ஆகும்.
11. யத் கிஞ்சித் அபி அவிதுஷா அபி விபோ மயா உக்தம்
தத் மந்த்ர சாஸ்த்ர வசந ஆதி அபித்ருஷ்டம் ஏவ
வ்யாஸ உக்தி ஸாரமய பாகவத உபகீத
க்லேசாந் விதூய குரு பக்தி பரம்பர ஆத்மந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! எனக்குப் போதிய அறிவும் ஞானமும் இல்லை என்றாலும், நான் கூறிய அனைத்தும், மந்த்ரஸாஸ்ரத்தில் உள்ளன. வ்யாஸ முனிவர் இயற்றிய, புராணங்களின் சாரமாக உள்ள ஸ்ரீமத் பாகவதம் உன்னையே துதிக்கின்றது. இத்தகைய சிறப்பும், பெருமையும், மேன்மையும் உடைய நீ எனது துயர்களை நீக்கி என்னுடைய பக்தியை மேலும் வளர்க்க வேண்டும்.