பதிவு செய்த நாள்
19
ஜூலை
2011
05:07
சிவன் கோயில்களில் இருக்கும் சந்திரன் சன்னதியில் பூஜை நடப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், வானத்தில் இருக்கும் நிலாவுக்கு, தீபாராதனை காட்டும் கோயிலைப் பார்த்துள்ளீர்களா? கடலூர் மாவட்டம், திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் கோயிலில் இந்தப் பூஜையைக் காணலாம். சிவனைப் போற்றி அவரது அடியார்கள் பாடிய தேவாரம், திருவாசகம் பாடல்கள் கிடைக்க இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் காரணமாக இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் விநாயகரின் உருவத்தைக்கண்ட சந்திரன், அவரைக் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை ஒளி இழக்கும்படி செய்து விட்டார்.அவன் மன்னிப்பு கேட்கவே, பாதி நாட்கள் வளரவும், மீதி நாட்கள் தேயும்படியாக செய்து விட்டார். பிறரது உருவத்தைக் கிண்டல் செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக விநாயகர் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இவ்வாறு, விநாயகரை சந்திரன் கேலி செய்த நாள் சங்கடஹரசதுர்த்தி நாளாகும். இந்நாளில் பொள்ளாப்பிள்ளையாருக்கு பூஜை முடிந்ததும், அவரது சன்னதி எதிரே ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள். அங்கிருந்து வானத்திலுள்ள சந்திரனை நோக்கி தீபாராதனை செய்வர். பிறரால் கேலி செய்யப்படுபவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டால், அவர்களுக்கு மனநிம்மதியும், கேலி செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிதம்பரத்தில் இருந்து காட்டு மன்னார்கோவில் செல்லும் வழியில் 17 கி.மீ., தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது.