பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
11:07
சபரிமலை:கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது, ஆடி மாத மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதற்காக 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல் சாந்தி சசி நம்பூதிரி நடையை திறந்தார். மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்திற்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடந்து வருகிறது. மாத பூஜைகளை தவிர, பக்தர்களின் நேர்த்திக்கடனாக, சகஸ்ரகலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், புஷ்பாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவையும் நடைபெற்றன. அப்பகுதியில், சில தினங்களாக மழை வலுத்து வருகிறது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, நாளை (21ம் தேதி) இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து ஆக., 4ம்தேதி மாலை 5.30 மணிக்கு நிறப்புத்தரி (தங்கள் நிலங்களில் புதிதாக சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை விவசாயிகள் கொண்டு வந்து சுவாமிக்கு படைக்கும் நிகழ்ச்சி) உற்சவத்திற்காக நடை திறக்கப்பட்டு, மறுநாள் (5ம் தேதி) உற்சவம் முடிந்து, நடை அடைக்கப்படும்.