பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
11:07
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் தமிழ் புலவர் அவ்வையாருக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் செவ்வாய் கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி செவ்வாய் தினத்தில் ஏராளமான பெண்கள் கூடி கொழுக்கட்டை அவித்து, பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
அம்மன் கோயில்களில் வழிபாடு: நெல்லை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.ஆண்டுதோறும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு பெண்கள் அரளிப்பூ மாலை சாற்றி வழிபட்டால் குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும், வளம் பெருகும், குழந்தைப்பாக்கியம் கிடைக்கும், கவலைகள், திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.ஆடி முதல் செவ்வாய் கிழமையான நேற்று காலை முதல் மாலை வரை நெல்லை பகுதி அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. வண்ணார்பேட்டை பேராத்துச்செல்வியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு ராகு கால பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.நெல்லையப்பர் கோயில் மஞ்சனவடிவுடையம்மன் சந்நிதி, டவுன் புட்டாரத்தியம்மன், ஜங்ஷன் கண்ணம்மன் கோயில், பாளை. வடக்கு, தெற்கு முத்தாரம்மன் கோயில்கள், ஆயிரத்தம்மன், குறிச்சி முத்தாரம்மன், தச்சநல்லூர், பேட்டை பகுதி அம்மன் கோயில்கள் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.