பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
11:07
திருநெல்வேலி : சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் ஆடித் தபசு விழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. வரும் 9ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11ம் தேதி மாலையில் ஆடித்தபசும், இரவு 11 மணிக்கு மேல் இரவு தபசு காட்சியும் நடக்கிறது.இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் கலெக்டர் நடராஜன் கூறியதாவது:சங்கரன்கோவில் ஆடித் தபசு விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அதிக அளவில் கழிப்பிட வசதிகள் செய்யப்படுகின்றன. திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருவிழா காலங்களில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவர். தேர் வரும் வீதிகள் உட்பட முக்கிய சாலைகள் சீரமைக்கப்படும். குடிநீர் வசதி, மருத்துவ வசதி, அவசர கால ஊர்தி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, தீயணைப்பு ஊர்தி வசதி உட்பட அனைத்து வசதிகளையும் அந்தந்த துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், ஆர்.டி.ஓ ராஜ கிருபாகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ராஜாமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் மீரா முகைதீன், கலு சிவலிங்கம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ், நெடுஞ்சாலைத் துறை கோட்ட இன்ஜினியர் சத்தியமூர்த்தி, பி.ஆர்.ஓ இளங்கோ, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி, சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகரன், நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.