பதிவு செய்த நாள்
29
ஆக
2015
12:08
சிவாஜி நகர்: சிவாஜி நகர், துாய ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு, மாதாவின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. திருவிழா நாட்களாக, இன்று முதல் செப்., 7ம் தேதி வரை, ஆக., 30ம் தேதி நீங்கலாக, தினமும் காலை முதல் இரவு வரை தமிழ், கன்னடம், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடக்கவுள்ளன. அதுமட்டுமின்றி, சிறப்பு திருப்பலிகளும், மாலை, 5:30 மணிக்கு கொடி மேடையில் மறையுரைகள், அன்னையின் கொடியேற்றம், நற்கருணை ஆசிர் நடக்கிறது. நாளை தமிழ், கன்னடத்தில் கூட்டுத்திரு மணம், 50ம் ஆண்டு பொன் விழா காணும் தம்பதியருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. செப்., 5ம் தேதி நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. பெருவிழா நாளான செப்., 8ம் தேதி அதிகாலை, 4:30 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 30 நிமிடத்துக்கு ஒருமுறை தொடர்ந்து திருப்பலிகள் நடக்கவுள்ளன. காலை, 9:30 மணிக்கு சிவாஜி நகர் ரஸ்சல் மார்க்கெட் சர்க்கிளில், பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், தமிழில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடத்துகிறார். மாலை, 5:30 மணிக்கு அன்னையின் திருத்தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் ஆலயத்தை அடைகிறது. நற்கருணை ஆசிருக்கு பின், அன்னையின் கொடி இறக்கப்படுகிறது.