திருநெல்வேலி : சொரி முத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. சிங்கம்பட்டி சொரி முத்தையனார் கோயில் ஆடி அமாவசை சிறப்பு பூஜை மற்றும் பூக்குழி திருவிழா வரும் 30ம் தேதி நடக்கிறது. இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் கலெக்டர் நடராஜன் தெரிவித்ததாவது:சிங்கம்பட்டி சொரி முத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழாவுக்கு அதிக ளவில பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரை விழா நாட்களில் அணையில் இருந்து 500 முதல் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உட்பட அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும். பாணதீர்த்தத்திற்கு படகு மூலம் செல்ல வேண்டியிருப்பதால் அதனை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.காணிகுடியிருப்பு விலக்குக்கு அருகில் பக்தர்களை பாதிக்கும் வகையில் தற்காலிக சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். கோயிலில் இருந்து காணிகுடியிருப்பு வரை சாலையின் இருபுறமும் முட் செடிகளை அகற்ற வேண்டும். வரும் 27ம் தேதி முதல் 2ம் தேதி வரை அதிக பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, பி.ஆர்.ஓ இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.