பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுார் என்னுமிடத்தில் மத்திய தொல்பொருள் துறை நீண்ட நாட்களாக மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி மேற்கொண்டுள்ளது. பண்டைய வணிக நகரமான மதுரையின் ஆதாரங்களை தேடி மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வாராய்ச்சியில், கலைநயம் மிக்க பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக தயாரிக்கப்பட்ட பானை என கூறப்படுகிறது.
இந்த அகழ்வாராய்ச்சியில் மூன்று உறைகிணறுகள் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 42 அகழ்வாராய்ச்சி குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் இருந்து கல் மணி, கண்ணாடி மணி, தாயக்கட்டை,செவ்வக வடிவ கட்டைகள் எடுக்கப்பட்டுள்ளன. கி.மு., முதலாம் நுாற்றாண்டை சேர்ந்த கட்டடங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.இதில் நீண்ட சுவர் உடைய கட்டடமும் அடக்கம். தமிழகத்திலேயே இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இங்குதான் கலைநயம் மிக்க பானை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி வரும் செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்த உள்ளோம். இந்த அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய பானை கண்டுபிடித்துள்ளோம். பழங்காலத்தில் இதில் மருத்துவ பொருட்களை வைத்திருக்கலாம் என எண்ணுகிறோம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய இப்பானையை மிகப்பெரிய செல்வந்தர்கள், ராஜாக்கள் போன்றவர்களால் தான் வைத்திருக்க முடியும், மற்றவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற பானைகள் தமிழகத்தில் கிடைத்ததில்லை. இதுகுறித்து மேலும் ஆராய உள்ளோம். இதுவரை 13 பிராமிய எழுத்துக்களை கண்டு பிடித்துள்ளோம். ஆதன், ஏதன், உத்திரன், கிஷன் ஆகிய தனிநபர் எழுத்துக்களுடன் கூடிய பொருட்களை கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் மதுரைக்கு வெகு அருகில் கீழடி வணிக நகரமாக திகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இங்கு அகழ்வாராய்ச்சியை தொடர வேண்டும் என மத்திய தொல்பொருள் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த மார்ச் மாதம் பணிகளை தொடர உள்ளோம், என்றார்.