பதிவு செய்த நாள்
07
செப்
2015
12:09
சிவகங்கை: மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார், ஏழை காத்தம்மன் கோயிலில் ஆவணி புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் குதிரை எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியில் அறநிலைய துறைக்கு சொந் தமான ஆதினமிளகி அய்யனார், ஏழைகாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. பத்தாம் நாளில் அய்யனார், அம்மனுக்கு சேங்கைவெட்டு எனும் கிடா வெட்டி பூஜை செய்தனர். 13வது நாள் வெள்ளியன்று இரவு வேளார் பொட்டலில் இருந்து பக்தர்கள் நேர்த்தியாக செலுத்தும் குதிரைகளை எடுத்து வந்து நாடகமேடையில் வைத்து அபிஷேகம் செய்தனர்.
பதினான்காம் நாளான செப்டம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரித்த 320 மண்குதிரைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்களின் குலவை சத்தம் முழங்க குதிரைகளை அய்யனார் கோயிலில் வைத்து நேர்த்தி செலுத்தினர். பின் நேற்று மாலை 3 மணிக்கு மேல, கீழப்பூங்குடி, திருமன்பட்டி, வில்லிபட்டி, வலையராதினிபட்டி, அழங்கம்பட்டி உட்பட அனைத்து கிராமத்தினரும் ஒன்றிணைந்து, அரங்கமேடையில் இருந்து வடம் பிடித்து கோயில் வரை எடுத்து வந்து, நாச்சியார் காளைக்கு கட்டி எருது கட்டு விழா நடத்தினர். எருது கட்டுக்கு பின் கோயில் வடத்தை வெட்டி வந்து, காப்பு இறக்கிய பின் நேற்று இரவு திருவிழா நிறைவு பெற்றது. கோயில் பரம்பரை டிரஸ்டி சம்பத் வேளார் தலைமையில், கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலப்பூங்குடி அய்யாக்கண்ணு வேளார்,68, கூறும்போது: 500 ஆண்டு பழமையான கோயில். ஆண்டுதோறும் ஆவணியில் நடக்கும் புரவி எடுப்பு விழாவில், பக்தர்கள் மண் குதிரையை அய்யனாருக்கு நேர்த்தி செலுத்தினால் குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என அனைத்து செல்வமும் பெருகுவது ஐதீகம். எட்டு பங்குகளை சேர்ந்தோர் பங்குக்கு 40 குதிரை வீதம், 320 மண் குதிரைகள் சுவாமிக்கு நேர்த்தியாக செலுத்தினர், என்றார்.