பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம், புஞ்சைகாளகுறிச்சியில், வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு, 4ம் தேதி காலை, 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடந்தது. பகல், 3 மணிக்கு கொடுமுடி காவிரி ஆற்றிற்கு சென்று திரளான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம், காலை, 4 மணிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புபால் ஆகிய, 18 வகை பொருட்களால், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து, மாலை, 5 மணிக்கு, கிருஷ்ணன் பிறப்பு வழிபாடு நடந்தது. பின், கிருஷ்ணனுக்கு உகந்த வெண்ணை, தயிர், பால் என மூன்று அடுக்குகளாக மூன்று உறிகளில் வைக்கப்பட்டிருந்தது. பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வர் மீது, வெங்கட்ரமண பெருமாள் அமர்ந்து, கோவிலை வலம் வந்து உறியடி துவங்கியது. முன்னதாக, பொங்கல் வைத்து படையலிட்டு மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, திருவீதி உலாவுடன், விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபாடு செய்தனர்.