பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
புதுச்சேரி: வெங்கட்டா நகர் விஜயகணபதி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வெங்கட்டா நகரில் உள்ள விஜயகணபதி, பக்த ஆஞ்ஜநேயர் கோவிலில், தற்போது புதிதாக தட்சிணாமூர்த்தி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உட்பட, கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜை கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு விசேஷ சாந்தி, 8:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 10:45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.11:00 மணிக்கு, கோவில் மூலவர் விமானம், முன் மண்டப விமானம், விஜயகணபதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளின் மூலவர் விமானத்திலும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் சம்பந்த சிவாச்சாரியார், மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். கோவில் அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சாரியார், சென்னை கன்யகேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோரும் புனித நீர் ஊற்றினர். மாலை 3.00 மணியளவில் சுவாமிக்கு மகா அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.