பழநி மலைக்கோயிலுக்கு பட்டா: ஆவணங்களை கலெக்டர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2015 11:09
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு பட்டா வழங்குவதற்காக ஆவணங்களை கலெக்டர் ஹரிஹரன் தலைமையிலான வருவாய்துறையினர் ஆய்வு செய்தனர்.பழநி மலைக்கோயில் 98.90 ஏக்கர் மொத்தப்பரப்பளவு தீர்வு ஏற்படாத தரிசாக ( புறம்போக்கு நிலம்) உள்ளது. இதை முறைப்படி தீர்வு ஏற்பட்ட தரிசு நிலமாக (நத்தம்புறபோக்கு) மாற்றித்தந்து கோயில் பெயரில் பட்டா வழங்க இந்துசமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்துள்ளது.
தாசில்தார் முன்னிலையில் நிலஅளவையர்கள், வருவாய்ஆய்வாளர்கள் கிரிவீதியில் உள்ள கட்டடங்கள், கடைகள் முந்தைய வரைப்படத்தில் அடிப்படையில் பட்டா உள்ளதா அல்லது புறம்போக்கு இடமா என விசாரித்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், தாசில்தார் மாரியப்பன் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பழநி மலைக்கோயில் பெயரில் பட்டா வழங்க இந்துஅறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் பெற்று வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்தோம்.
மலை அடிவாரம் பகுதியில் பட்டா இல்லாமல் வீடுகள், கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ள இடங்களையும் கோயிலுடன் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம். சிந்தலவாடம்பட்டியில் தனியார் பெயரில் பட்டா உள்ள கோயில் நிலம் 11 ஏக்கரை பட்டா மாறுதல் தரக்கோரியுள்ளோம்,” என்றார்.கலெக்டரிடம் கேட்டபோது, “பழநி கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது. பட்டா மாறுதல் குறித்தும் மனு கொடுத்துஉள்ளனர். அதுவும் பரிசீனையில் உள்ளது”, என்றார்.