பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
ஆர்.கே.பேட்டை: ஒரு வாரமாக நடந்து வந்த கிருஷ்ண ஜெயந்தி திருவிழா, நேற்று முன்தினம் உறியடி வைபவத்துடன் நிறைவடைந்தது. உற்சவ மூர்த்தி வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே..பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், பெரிய தெருவில் உள்ள பஜனை ÷ காவிலில், கிருஷ்ண ஜெயந்தி திருவிழா, கடந்த 5ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒரு வார காலம் கொண்டாடப்பட்டது. தினசரி காலையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மாலையில், பக்தி பாடல்கள் பஜனை நடத்தப்பட்டு வந்தது. இதில், கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாத்தியங்களை இசைத்தனர். நிறைவு நாளான, நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வெண்ணெய் திருடிய வைபவம் நடத்தப்பட்டது. இதில், கண்ணன், ராதை மற்றும் கோபியர் வேடம் அணிந்த சிறுவர்கள், கோவில் வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த உறியில் இருந்து வெண்ணெயை திருடினர். இதை காண, திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதை தொடர்ந்து, உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார்.