பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது, ரூபாய் நோட்டு கட்டுகள் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது; ஆதாரத்துடன் புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் மற்றும் விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல்கள், கடந்த, 10ம் தேதி எண்ணப்பட்டன. விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள, ஐந்து உண்டியல்களில், ஐந்து லட்சத்து, 88 ஆயிரத்து, 218 ரூபாய்; 20 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி இருந்தன. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் <உள்ள நான்கு <உண்டியல்களில், எட்டு லட்சத்து, 94 ஆயிரத்து, 105 ரூபாய்; 53 கிராம் தங்கம்; 54 கிராம் வெள்ளி மற்றும் 10 டாலர் மதிப்பு கொண்ட சிங்கப்பூர் நோட்டுக்கள் எட்டு, 20 ரூபாய் மதிப்புள்ள இலங்கை நோட்டு ஒன்று இருந்தன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பெண்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். பிரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டன. கோவில் ஊழியர்கள் சிலர், ரூபாய் நோட்டு கட்டுக்களில் இரண்டை, மறைத்து வைத்துக் கொண்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது. மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி மற்றும் அதிகாரிகள் இருந்துள்ளனர். அவர்களுக்கு தெரியாமல், ரூபாய் நோட்டு கட்டுகள் "அபேஸ் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெருமாள் கோவிலில், புதிதாக "சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காணிக்கை எண்ணும் காட்சிகள், அதில் பதிவாகியிருக்கும் என்ற கோணத்தில், ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டருடன் கேமராவுக்கு இணைப்பு கொடுக்காமல் இருந்தது
தெரியவந்தது. இதுவும், பக்தர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆணையர் ஹர்ஷினியிடம் கேட்டபோது, ""காணிக்கை எண்ணிக்கையின்போது, துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், கோவில் ஊழியர்களை கண்காணித்து கொண்டிருந்தோம். அவர்கள் யாரையும், நெருங்கவிடவில்லை. ரூபாய் நோட்டு கட்டுகள் மாயமாக வாய்ப்பில்லை. உண்டியல் திறப்பது, கட்டுக்களாக மாற்றுவது உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டதோடு, பெட்டிக்குள் கட்டுக்கள் அடுக்கி, பூட்டப்பட்டு, அதன் சாவியும் அதிகாரிகள் வசமே இருந்தது. கோவிலுக்குள் நடைபெறும் அரசியலால், இதுபோன்ற குற்றச்சாட்டு வெளிவருகிறது. ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால், ஆதாரத்துடன் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
சர்ச்சை புதிதல்ல: கோவில் உண்டியல் காணிக்கை குறித்த சர்ச்சை ஏற்படுவது, இது முதன்முறையல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன், உண்டியலுக்குள், கயிறு கட்டப்பட்ட நிலையில், இரண்டு காந்தம் இருந்தது. கயிறு கட்டி காந்தத்தை, உண்டியலுக்குள் இறக்கி, காணிக்கையை சில ஊழியர்கள் திருடியதாக, அப்போது புகார் எழுந்தது. அதேபோல், தற்போதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.