ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருமணம் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு மட்டுமே தேவியர் இருவருடன் திருமணம் நடக்கிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா செப்.8ல் கொடி யேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவில் தினமும் மாலை 6மணிக்கு கேடகம், சிம்மம், மயில், யானை மற்றும் ரிஷப வாகனங்களில் விநாயகர் வீதி உலா நடந்தது.சதுர்த்தி விழாவின் எட்டாம் நாளான நாளை மாலை 5.30 மணிக்கு சித்தி,புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6மணிக்கு தேவியருடன் விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமண தடை உள்ளவர்கள் இந்த விநாயகர் திருமண விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதுமண தம்பதியினரை தரிசிப்பது வழக்கம்.