பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
திருப்பூர்: மாவட்டத்தில், மேலும் ஆறு கோவில்களில், இன்று அன்னதான திட்டம் துவக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 21 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆறு கோவில்களுக்கு, இத்திட்டத்தை விரிவு படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, அன்னதானக்கூடம், பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. எனினும், திட்டம் துவங்குவது தள்ளிப்போனது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அன்னதான திட்டம், இன்று விரிவு படுத்தப்படுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில், தாராபுரம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், வாமனஞ்சேரி வலுப்பூர் அம்மன் கோவில், மடவிளாகம் அங்காளம்மன் கோவில், முதலிபாளையம் கெங்கநாயக்கன்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில், அன்னதான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.