பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
புவனகிரி: நுாற்றாண்டுகள் கண்ட பழமையான அம்மன் கோவிலை, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சாலையிலிருந்து 8 அடி உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புவனகிரி, குறியாமங்கலம் சாலையில், தேவாங்கர் தெருவில், 300 ஆண்டுகள் பழமையான, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் 1,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலஸ்தானம், விநாயகர், முருகர், நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் 800 சதுர அடியில் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையை உயர்த்தியதன் காரணமாக, சாலையிலிருந்து 3 அடிக்கு கீழே கோவில் சென்று விட்டது. இதனால், மழைக்காலத்தில் மழை நீரும், கழிவு நீரும் கோவிலுக்குள்ளே புகுந்தது. எனவே, சாலையைவிட மேடாக கோவிலை உயர்த்த, கோவில் நாட்டாமை சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி மூலமாக, நிர்வாக பொறியாளர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த ஆறு மாதங்களாக, புவனகிரியில் தங்கியிருந்து, கோவிலை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலமாக, 8 அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு, தற்போது, 7 அடி உயரத்திற்கு கோவில் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் பணி முழுமை பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.